தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளிலும் நேற்று (ஏப்.6) தேர்தல் நடந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்கு உள்பட்ட சாலவாக்கம் அருகே திருவானைகோயில் பகுதியில் வாக்கு பதிவு மையத்தில் திமுகவினருக்கு அதிக வாக்கு பதிவாகி வருவதாக ஊராட்சி செயலாளர் அதிமுகவினருக்கு தகவல் தெரியப்படுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் வாக்கு பதிவை நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக திமுகவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் இருகட்சியினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே அது கைகலப்பாகியுள்ளது. இதில் அதிமுகவினர் 7 பேர் முன்னாள் திமுக மாவட்ட கவுன்சிலர் துரைவேலின் மகன் மனோஜ் (32) என்பவரை அரிவாளால் வெட்டி சரமாரியாக தாக்கியுள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த திமுக நிர்வாகி மனோஜை மீட்டு அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். திமுக நிர்வாகி மனோஜை தாக்கியது தொடர்பாக சாலவாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைவர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதனிடையே, திமுக நிர்வாகியை சரமாரியாக அரிவாளால் வெட்டிய அதிமுக நிர்வாகிகளை கைது செய்யக் கோரி அரசு பேருந்தை சிறைபிடித்து 200-க்கும் மேற்பட்டோர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவானைகோவில் பகுதியில் நடந்த இப்போராட்டம் குறித்து அறிந்த சாலவாக்கம் காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து, குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் இந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க:அட, இவர்தான் கமலுக்கு வில்லனா... விக்ரம் அப்டேட் வழங்கிய லோகேஷ்!