உலகம் முழுவதும் பல்வேறு கிளைகளைக் கொண்ட பிரபல உணவகமான சரவணபவன் காஞ்சிபுரம் பகுதியில் காந்தி சாலை, பேருந்து நிலையம், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட மூன்று இடங்களில் இயங்கிவருகிறது. இந்த மூன்று உணவகத்திற்கு மண்டல மேலாளராகப் பழனியப்பன் என்பவர் பணியாற்றிவந்தார்.
இம்மூன்று உணவகத்திலும் சுமார் 300 ஊழியர்கள் பணி செய்துவரும் நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக ஊழியர்களுக்கு சம்பள பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இதற்கு நிர்வாகம் சார்பாக தற்போது நிலைமை சரி இல்லை என்றும், அடுத்த மாதம் சம்பளம் பாக்கி கொடுத்துவிடலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து ஊழியர்களிடம், மேலாளர் இதனைத் தெரிவித்திருக்கிறார். இதனை ஏற்க மறுத்த ஊழியர்கள் போராட்டம் நடத்தப்படுவதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து, நேற்று அந்த மேலாளர், உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தலா 5,000 ரூபாய் முன்பணமாக வழங்கியுள்ளார்.
இதனால் சென்னை வடபழனியில் இயங்கிவரும் சரவணபவன் நிர்வாகம் தன்னை நேரில் அழைத்து தகாத வார்த்தையில் பேசியதாகவும், கண்டித்ததாகவும் உணவக ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் ஊழியர்களிடம் தொலைபேசியில் இரவு முழுவதும் தனது மனக்குமுறலை வெளிப்படுத்திய பழனியப்பன், காலையில் நீண்டநேரமாகியும் வேலைக்கு வராத காரணத்தால் உணவக ஊழியர்கள் அவரைத் தொடர்புகொண்டுள்ளனர்.
பின் சில ஊழியர்கள் மேலாளர் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, அவர் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, சக ஊழியர்கள் யாரும் வேலைக்குச் செல்லாமல், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டும், ஊழியர்களின் இரண்டு மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காஞ்சிபுரம் காந்தி சாலை அருகிலுள்ள சரவணபவன் உணவகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: குடும்ப பிரச்னையில் சிலிண்டரை வெடிக்க வைத்து மனைவி தற்கொலை - உடல் கருகி உயிரிழப்பு