காஞ்சிபுரம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா சே.நாச்சியார்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராமஜெயம். இவரது மனைவி இரத்தினா. இந்த தம்பதிக்கு ராஜலட்சுமி (வயது 5), தேஜா ஸ்ரீ (இரண்டரை வயது) மற்றும் 3 மாத ஆண் குழந்தை என மூன்று பிள்ளைகள் இருந்தனர். இந்நிலையில், சென்னையிலுள்ள தனது மாமியார் வீட்டிற்கு குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை (ஜூன் 2) ராமஜெயம் சென்றுவிட்டு நேற்றிரவு அங்கிருந்து மீண்டும் சொந்த ஊருக்கு காரில் திரும்பியுள்ளார்.
அப்போது ராமஜெயம் குடும்பத்துடன் அவரது உறவினரான ராஜேஷ் (வயது 29) என்பவரும் உடன் வந்துள்ளார். அப்போது இவர்கள் சென்னை - பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலை வழியாக காஞ்சிபுரத்தை அடுத்த சித்தேரிமேடு பகுதியைக் கடந்துச் சென்று கொண்டிருந்த போது, ராமஜெயம் சென்ற காரின் டயர் வெடித்ததாகத் தெரிகிறது.
இதனால் நிலை தடுமாறிய கார், சாலையின் ஓரமாக இரும்பு லோடுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ராமஜெயத்தின் மனைவி இரத்தினா, குழந்தைகளான ஐந்து வயது ராஜலட்சுமி, இரண்டரை வயது குழந்தை தேஜாஸ்ரீ மற்றும் இவர்களுடன் வந்த உறவினர் ராஜேஷ் ஆகிய நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: Track restoration: ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்
மேலும், 3 மாத ஆண் குழந்தை காரில் சிக்கித் தவித்ததுள்ளது. அதனை தொடர்ந்து, விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாலுசெட்டி சத்திரம் காவல் துறையினர், ராமஜெயத்தையும் கைக்குழந்தையையும் மீட்டு அவசர ஊர்தி மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மூன்று மாத ஆண் குழந்தை உயிரிழந்தது. தற்போது அனைவரயும் இழந்த ராமஜெயம் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பாலுசெட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை - பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி நடந்த இந்த சாலை விபத்தில், கணவன் கண் முன்னே மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இறந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கருவேல மரம் டெண்டர் விவகாரம்: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!