புரெவி புயல் எதிரொலியாக கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கனமழையின் காரணமாக ஒருங்கிணைந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 676 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளன.
இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 239 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 437 ஏரிகளும் உள்ள நிலையில், அதில் 540 ஏரிகள் 100% முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 89 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 91 ஏரிகளும் 75% கொள்ளளவையும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 53 ஏரிகள் 50% கொள்ளளவையும் எட்டியுள்ளன.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டங்களில் 16 ஏரிகள் மிகப்பெரிய ஏரிகளாக உள்ளன. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதன்மையானதாக தென்னேரி ஏரி உள்ளது. இந்த ஏரியின் 18 அடி ஆழத்தில் 1 டிஎம்சி தண்ணீரைத் தேக்க முடியும். ஏரியின் முழுக் கொள்ளளவான 18 அடியும் தற்போது நிரம்பி ஏரி முழுக் கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறுகிறது.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளான தாமல் ஏரி 18.60 அடி ஆழம் கொள்ளளவு கொண்டதில் 14.50 அடி ஆழம் நீர் நிரம்பி உள்ளது. அதேபோல் 20 அடி கொள்ளளவு கொண்ட உத்திரமேரூர் பெரிய ஏரியில் 9.50 அடி நீர் நிரம்பியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் ஏரி 17.70 அடி ஆழம் கொண்டதில் 17.70 அடி முழுக் கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேறுகிறது.
18.40 அடி கொள்ளளவு கொண்ட மணிமங்கலம் ஏரி அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. அதேபோல், 13.20 அடி கொள்ளளவு கொண்ட பிள்ளைபாக்கம் ஏரி முழுக் கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறுகிறது எனப் பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கொடைக்கானல்-பழனி சாலையில் மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு!