காஞ்சிபுரம்: ஒரகடம் அடுத்த வல்லம் பகுதியில் எஸ்விஜிஎல் லாஜிஸ்டிக்ஸ் எனும் பெயரில் தனியார் கிடங்கு ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சில நாள்களுக்கு முன்னர் இங்கு வைக்கப்பட்டிருந்த 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அப்போலோ டயர் கம்பெனியின் 105 டயர்கள் திருடப்பட்டன.
இதனால் அதிர்ச்சியடைந்த நிறுவன மேலாளர், இதுகுறித்து ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து, காவல் துறையினர் குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
திருட்டில் ஈடுபட்ட ஊழியர்
இந்நிலையில், விசாரணையில் கிடங்கில் பணிபுரிந்த பிரேம், அவரது உறவினர் லியோ பவுல்ராஜ், லாரி ஓட்டுநர் ரஹீம் ஆகியோர் கூட்டாக சேர்ந்து டயர்களைத் திருடியது தெரிய வந்தது.
மேலும் திருடிய டயர்களை ராணிப்பேட்டை, வேலூர் பகுதிகளைச் சேர்ந்த, ஜாகீர், தஸ்தாகீர் ஆகியோருக்கு விற்பனை செய்ததும் அம்பலமானது. இதனைத் தொடர்ந்து திருட்டில் தொடர்புடைய ஆறு பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே குடோனில் இருந்து சுமார் எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள மூன்றாயிரத்து 750 டயர்கள் கடத்தப்பட்டது தொடர்பாக, அங்கு பணிபுரிந்த லியோ பவுல்ராஜ் பணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தில் சென்ற திமுக பிரமுகர் வெட்டிக் கொலை!