காஞ்சிபுரம்: சென்னைக்கு நீர் ஆதாரமாக விளங்க கூடிய முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியானது தொடர் கனமழை காரணமாக வேகமாக நிரம்பி வருகிறது.ஏரியின் முழு கொள்ளளவான 24 அடியில் 23.60 அடி நிரம்பியுள்ளது. ஏரியின் முழு கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது 3540 மில்லியன் கன அடி நீர் உள்ளது.
மேலும் ஏரியின் நீர்வரத்து 750 கன அடியாக வந்துக்கொண்டு இருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து வினாடிக்கு 500 கன அடி உபரி நீரானது மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
முதல் நாளான நேற்றைய தினம் ஏரியிலிருந்து வினாடிக்கு 250 கன அடி உபரி நீரானது வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து ஏரியின் நீர் வரத்து அதிகரித்துள்ளதுள்ளதால் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் போது ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் படிப்படியாக உயர்த்தி வெளியேற்றப்படும் எனவும் தகவல் தெரிவித்துள்ள பொதுப்பணி துறையினர் ஏரியின் கொள்ளளவினையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தற்போது வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரபாக்கம் ஏரியை சுற்றியுள்ள நத்தம், குன்றத்தூர், நந்தம்பாக்கம், பூந்தமண்டலம், வழுதம்பேடு, பழந்தமண்டலம், எருமையூர்,சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காஞ்சிபுரம் அருகே ரூ.15 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு