காஞ்சிபுரம்: செவிலிமேடு ஓரிக்கை சாலையில் அமைந்துள்ளது வடிவேல் நகர். இந்நகரில் அசோக் குமார்-சுபா தம்பதியினர் வசித்துவருகின்றனர். அசோக் குமார் பணி நிமித்தம் காரணமாக திருவண்ணாமலையில் தங்கியிருந்து வாரம் ஒருமுறை வீட்டிற்கு வருவது வழக்கம்.
அதேபோல், அவரது மனைவியும் ஒரகடம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவர்களது குழந்தைக்கு காதணி விழா நடைபெற்றபோது, அன்பளிப்பாக தங்க மோதிரம் உறவினர்களால் வழங்கப்பட்டது.
காவலர்கள் விசாரணை
இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு திருவண்ணாமலை உறவினர் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, நேற்று (ஆக. 22) மதியம் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு வீட்டினுள் அறையிலிருந்த பீரோ, கட்டிலில் பொருள்கள் சிதறிக் கிடந்தன.
இதையடுத்து, பீரோவை சோதனை செய்தபோது அதிலிருந்த 22 சவரன் நகை, பத்தாயிரம் ரூபாய் ஆகியவை கொள்ளைபோனது தெரியவந்தது.
இது குறித்து, காஞ்சிபுரம் தாலுகா காவல் துறைக்கு வரப்பெற்ற புகாரின்பேரில் அவர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களைக் காவலர்கள் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: 'விசைப்படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதல் - உயிர் தப்பிய 6 தமிழ்நாட்டு மீனவர்கள்'