புதுக்கோட்டை மாவட்டம், பரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் ரஷிம் மகன் இதயத்துல்லா என்பவர் வத்தி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே எம்.எஸ்.தக்கா கிராமத்தில் வத்தி வியாபாரம் செய்துவிட்டு சேலம்-சென்னை செல்லும் சாலையின் ஓரமாக செல்போனில் பேசிக்கொண்டு நடந்து சென்றுள்ளனர்.
அப்பொழுது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், இதயத்துல்லா பேசிக்கொண்டிருந்த செல்போனை பிடுங்கி கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். பதறிப்போன இதயத்துல்லா என்ன செய்வது என்று தெரியாமல் கூச்சலிட்டுள்ளார். இதனை அறிந்த பொதுமக்கள் அந்த இளைஞர்களை துரத்தி பிடித்து தர்ம அடி கொடுத்து, பின் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் காவல்துறையினர் விசாரணை செய்ததில், பிடிபட்ட இருவரும் கள்ளக்குறிச்சி மாவட்டம் புதுமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தினகரன் (23), தமிழ்ச்செல்வன் (22) என்பதும், இவர்கள் தொடர்ந்து செல்போன் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம், செல்போன்களை பறிமுதல் செய்து, இருவரையும் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: மே 3 முதல் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு: அட்டவணை வெளியீடு