கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் காட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயதான இளம் பெண் பிரேமா. இவர் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி காலை வீட்டின் அருகே உள்ள தோட்டத்திற்கு சென்ற நிலையில், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரை தேடி தாய் தோட்டத்திற்கு சென்றபோது அங்கு தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
உடனே அவரை மீட்டு பிரேமாவுக்குஉளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, தொடர்ந்து மேல் சிகிச்சைக்காகச் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி அன்றிரவே உயிரிழந்தார்.
இதுதொடர்பாக எடைக்கல் காவல் நிலையத்தில் உயிரிழந்தவரின் தம்பி பிரபாகரன் அளித்த புகாரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். முதல்கட்ட விசாரணையில், சின்ன சேலத்தை அடுத்த அம்மையகரம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலா என்பவர் பிரேமாவை காதலித்தது தெரியவந்ததும், அவரைப் பிடித்து விசாரித்தபோது அவருக்கும் இந்தக் கொலைக்கும் எந்த தொடர்பு இல்லை என தெரியவந்தது.
பிறகு பாலாவிடம், பிரேமா கடைசியாகப் பேசிய செல்ஃபோன் எண்ணை ஆய்வு செய்தனர். அதில் தந்தை நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துப் பயிர் செய்துவரும் 48 வயதான கலியமூர்த்தி என்பவற்றுடையது என தெரியவந்தது.
கலியமூர்த்தி என்னை ஆய்வு செய்தபோது அந்த எண்ணிலிருந்துதான் பிரேமா பலமுறை தன் காதலுடன் பேசியுள்ளார் என்பது தெரியவந்தது. அச்சந்தேகத்தின் பேரில் கலியமூர்த்தியிடம் காவல் துறையினர் தீவிரமாக விசாரித்தபோது, தான் பிரேமாவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். பிரேமாவிடம் செல்ஃபோன் இல்லாததால் காதலனுடன் பேச அடிக்கடி கலியமூர்த்தியிடம் செல்ஃபோனை வாங்கிக்கொள்வார், அந்த உதவியைப் பயன்படுத்தி இளம்பெண்ணுடன் பலமுறை அத்துமீறி முயன்றதாகத் தெரிவித்தார்.
மேலும் ஏப்ரல் 28ஆம் தேதியன்று பிரேமாவை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றபோது அவர் மறுத்துத் தப்பி ஓட முயன்றதால், அருகில் கிடந்த உருட்டுக் கட்டையால் அவரை தாக்கி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து கலியமூர்த்தியைக் கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.