கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் பரப்புரையை மேற்கொண்டுவருகிறார். அப்போது, களமருதூர் கடைவீதியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் யார் பலன் அடைந்தார்கள், என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
திமுக ஆட்சி அமைந்தவுடன் உளுந்தூர்பேட்டை பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைத்துக் கொடுக்கப்படும். பொதுமக்களின் நலன்கருதி களமருதூரில் காவல் நிலையம் அமைக்கப்படும். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது நீட் தேர்வு வேண்டாம் என்று கூறினார்கள். ஆனால், தற்போது இரண்டு அடிமைகள் ஆட்சியில் நீட் தேர்வு தொடர்ந்து நடந்துவருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு, கல்விக்கடன் ஆகியவை ரத்துசெய்யப்படும்.
கடந்த ஓராண்டுக்கு முன்பு பொள்ளாச்சியில் நடந்த சம்பவம் அனைவருக்கும் தெரியும். பெண்களைக் கடத்திச் சென்று ஆபாசமாக காணொலி எடுத்து அவர்களை மிரட்டினார்கள். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அதில் அதிமுக நிர்வாகி அருளானந்தம் என்பவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அதேபோல் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்பட்டது அனைவருக்கும் தெரியும்.
இது சம்பந்தமாக முதலமைச்சரிடம் கேட்டபோது, அந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று கூறினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உழைத்து படிப்படியாக முன்னுக்கு வந்ததாக கூறுகிறார். அவர் எப்படி வந்தார் என்று எல்லாருக்கும் தெரியும். சசிகலாவின் காலைப்பிடித்துதான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர பதவிக்கு வந்தார்.
இதை நான் எங்கு போனாலும் சொல்லத் தயார் நான் கருணாநிதியின் பேரன். யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் குமரகுரு முதலமைச்சரின் பினாமி என்பது உங்களுக்கே தெரியும். முதலமைச்சர் அடித்த அனைத்து பணமும் குமரகுருவிடம்தான் உள்ளது. ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்ட பின்னர் சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த நிலையில் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சசிகலா செல்வார் என்று தெரிந்து ஜெயலலிதாவின் நினைவிடம் மூடப்பட்டுள்ளது.
நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக நான்கு மாணவர்கள் நீட் தேர்வுக்கு பயந்து தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். ஜெயலலிதா எப்படி இறந்தார் என்று யாருக்கும் தெரியாது. அவர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்தபோது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைச்சர்கள் பேட்டி கொடுத்தார்கள், 'அம்மா இட்லி சாப்பிட்டார், அம்மா பொங்கல் சாப்பிட்டார்' என்று கூறினார்கள்.
2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறும் என்று தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். தலைவரின் வேண்டுகோளை ஏற்று திமுகவுக்கு வாக்களித்து 234 தொகுதிகளிலும் திமுகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: ’மீனவர்களை காக்க திமுக ஆட்சிக்கு வர வேண்டும்’