கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் அவரது மனைவி சிவசக்தியிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால் மிகவும் மனமுடைந்த அவரின் மனைவி சிவசக்தி இரண்டு நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உடலை கைப்பற்றிய உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
யார் விசாரிப்பது?
திருமணமாகி மூன்று ஆண்டுகள் மட்டுமே ஆனதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மறைந்த சிவசக்தி கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வருவாய் கோட்டத்தை சேர்ந்தவர் என்பதால் தான் விசாரணை செய்ய முடியாது என விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் கூறியதாக தெரிய வருகிறது.
விழுப்புரம் மருத்துவமனையில் பெண்ணின் உடல் உள்ளதால் திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் அங்கு விசாரணைக்கு செல்லவில்லை. இதனால் இறந்த பெண்ணை உடற்கூறு ஆய்வு செய்யாமல், இரண்டு நாட்கள் காலதாமதாம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரத்தில் மறியல்
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் உடற்கூறு ஆய்வு செய்யாமல் மறைந்த சிவசக்தியின் உடலைக் கேட்டு உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியின் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இந்த தகவலை அறிந்த உளுந்தூர்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் மணிமொழியன் தலைமையிலான காவலர்கள் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடற்கூறு ஆய்வு செய்ய உடனே ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு உறவினர்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பின்னர் சீர்செய்யப்பட்டது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 8000-க்குக் கீழ் குறைந்த கரோனா