கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு அரசு சார்பாக பொதுமக்களுக்கு கரோனா நிவாரண பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.
இதில் உளுந்தூர்பேட்டை நகரிலுள்ள முதல் வார்டில் இயங்கிவரும் நியாயவிலைக் கடையில் தமிழ்நாடு அரசு சார்பாக கொடுக்கப்பட்ட நிவாரண பொருள்களில் உளுத்தம்பருப்பு கொடுக்கவில்லை என பொதுமக்கள், மின்னஞ்சல் மூலமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு புகார் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகாரையடுத்து முதலமைச்சர் உத்தரவின்படி உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் மணிக்கண்ணன் வீடு வீடாக சென்று கரோனா நிவாரணப்பொருள்களை ஆய்வு மேற்கொண்டார்.
அப்பொழுது ஏழு நபர்களுக்கு மட்டும் தவறுதலாக உளுத்தம்பருப்பு கொடுக்கவில்லை என தெரியவந்தது. இதனடிப்படையில் கவனக்குறைவாக செயல்பட்ட நியாயவிலைக்கடை விற்பனையாளரை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்ய மணிக்கண்ணன் உத்தரவிட்டார்.
அதன் பின் பொதுமக்களிடம் பேசிய மணிக்கண்ணன், உங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் அதை எண்ணிடம் நேரடியாகவே தொலைப்பேசி வாயிலாகவே தெரிவியுங்கள் என்றார்.
அப்பகுதியை சேர்ந்த சிலபெண்கள், நியாயவிலைக்கடை விற்பனையாளர் மக்களுக்கு நியாயமான முறையில் பொருட்களை எந்தவித பாகுபாடின்றி வழங்கி வருகிறார். எனவே அவரது பணியிடை நீக்கத்தை மறுபரிசீலனை செய்து அவரை மீண்டும் இதே கடைக்கு பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து பரிசீலிக்கப்படும் என மணிக்கண்ணன் தெரிவித்தார்.