கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கோமுகி அணையிலிருந்து அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், பரிகம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர்-கனககுமாரி தம்பதியின் 13 வயதுடைய மகன் ஜான்சீனா, தனது நண்பர்களுடன் கோமுகி அணையை சுற்றி பார்ப்பதற்காக சென்றார்.
கோமுகி அணையில் இருந்து வரும் தண்ணீரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஜான்சீனா, கால் தவறி அணையில் விழுந்தார். அந்த சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அணையில் குதித்து தவறி விழுந்த சிறுவனை சடலமாக மீட்டனர். தகவலறிந்து வந்த கச்சிராயபாளையம் காவல்துறையினர், சிறுவனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல் மணிமுக்தா ஆற்றில் குளிக்கச்சென்ற வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது 11 வயதுடைய மகன் பரத், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். இது பற்றி தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த தியாகதுருகம் காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் இருவேறு இடங்களில் உள்ள நீர்நிலைகளில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அணைகளில் அதிகப்படியான உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுவதால், அவற்றை காண இளைஞர்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் அணைக்கு வந்து செல்கின்றனர். இதனால், பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.