கள்ளக்குறிச்சி: மேல்மருவத்தூரில் அரசு பேருந்து நடத்துநர் பெருமாள் என்பவரை பயணி ஒருவர் தாக்கிய நிலையில் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து இறந்தவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் இன்று (மே 14) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பெருமாள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும், இது போன்று போக்குவரத்துக்கழக ஊழியர்கள் மீது தாக்குதலில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் போக்குவரத்து கழக ஊழியர்களின் பாதுகாப்புக்கென்று தனிச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஏராளமான போக்குவரத்துக்கழக ஊழியர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: பயணியால் தாக்கப்பட்டு உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் ரூபாய் நிவாரணம்