கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் நைனார்பாளையம் செல்லும் சாலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக அரசு டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்று இயங்கி வருகிறது.
இந்தக் கடையில் நேற்றிரவு (ஆகஸ்ட் 31) 10 மணியளவில் மதுபான விற்பனையை முடித்துவிட்டு விற்பனையாளர்கள் சுப்பிரமணி, செல்வம், கண்ணுசாமி ஆகிய மூவரும் கடையை பூட்டிவிட்டு கிளம்ப தயாராகினர்.
அப்போது அங்கு வந்த மூன்று நபர்கள் கடையில் சரக்கு இருக்கிறதா என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திடீரென தயாராக வைத்திருந்த மிளகாய் பொடியை மூவரின் முகத்திலும் வீசியுள்ளனர்.
இதில் சுதாரித்த விற்பனையாளர்கள் மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். மூவரையும் துரத்திச் சென்ற கொள்ளையர்கள் பணப்பை வைத்திருந்த விற்பனையாளர் சுப்பிரமணியை அரிவாளால் வெட்டி, பணத்தை பறித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.
இதனால் அரசு மதுபான கடையில் மது விற்பனையின் மூலம் வந்த 2 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் பறிபோனது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சின்னசேலம் காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் படுகாயமடைந்த ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஆளரவம் இல்லாத பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருவதால் அங்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இதனாலேயே கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: வறுமைக்கு எதிராக இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்துப் போராட வேண்டும்!