கள்ளக்குறிச்சி : நிறைமதி கிராமத்தைச் சேர்ந்த பிச்சை பிள்ளை என்பவருடைய மகன் ஆனந்தராஜ் (24). இவர் திருச்சியில் கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். நேற்று (ஜூலை.31) தனது குடும்பத்தினரை பார்க்க ஆனந்தராஜ் தனது சொந்த ஊரான நிறைமதி கிராமத்திற்கு வந்துள்ளார்.
அப்போது வெளியூரிலிருந்து வந்த ஆனந்தராஜை நிறைமதி கிராமத்தைச் சேர்ந்த அவரது நண்பர்கள் ஆகாஷ், பிரகாஷ், அபி, என்ற மூன்று இளைஞர்களும் மது அருந்துவதற்காக அருகிலுள்ள மலைக்கோட்டாலம் என்ற கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
தொடர்ந்து நான்கு பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்று மது பாட்டில்களை வாங்கி வந்து மலைக்கோட்டாலம் கிராமத்தின் கோமுகி ஆற்றுப்பகுதி கரையில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
இதை அந்தப் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்தவர்கள் நேரில் பார்த்துள்ளனர். இந்நிலையில் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த ஆனந்தராஜ் ஒரு சில மணி நேரத்தில் திடீரென கோமுகி ஆற்றின் நீர்குட்டையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதை அவ்வழியாக வந்த சிலர் பார்த்து வரஞ்சரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, உயிரிழந்த ஆனந்தராஜின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஆனந்தராஜுடன் வந்த அவரது மூன்று நண்பர்களிடமும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் இளைஞர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் காவல் துறையினர் மூன்று இளைஞர்களையும் வரஞ்சரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
இதையும் படிங்க: கடன் பிரச்னை - அதிமுக ஊராட்சித் தலைவர் தற்கொலை