கள்ளக்குறிச்சி: கடந்த ஆட்சிக் காலத்தில் (அதிமுக) சட்டம் ஒழுங்கு சிறப்பாக நடைபெற்றதாகக் கூறி மத்திய அரசு பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது. இதை தமிழ்நாட்டிற்கு கிடைத்த கௌரவமாகப் பார்க்க வேண்டுமே தவிர தற்போதுள்ள அரசு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு நாங்கள்தான் காரணம் எனக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் பாஜக மாநில நிர்வாகிகள், ஓபிசி அணியின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது செய்தியாளரிடம் பேசிய அவர், "பாஜக அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதாகத் தேர்தல் அறிக்கையில் கூறவில்லை.
ஆனால் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதைப் போல் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கவில்லை. பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் (சரக்கு - சேவை வரி) கொண்டுவர வேண்டுமென திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு கூறுகிறார்.
மறுபக்கம் தமிழ்நாடு நிதி அமைச்சர் பெட்ரோல், டீசல் விலையை சரக்கு - சேவை வரி வரம்புக்குள் கொண்டுவரக் கூடாது என்கிறார். திமுகவின் நிலைப்பாடு மக்களைக் குழப்பமடையச் செய்கிறது.
திமுகவின் இந்த இரட்டை நிலைப்பாட்டை அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும். கடந்த ஆட்சிக் காலத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக நடைபெற்றதற்காக மத்திய அரசு பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது.
இதை தமிழ்நாட்டிற்கு கிடைத்த கௌரவமாகப் பார்க்க வேண்டுமே தவிர தற்போதுள்ள அரசு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு நாங்கள்தான் காரணம் எனக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி பல்லில்லாத பாம்பாக உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: நாடக அரசியல்; திமுக அரசே மொத்த நகைக் கடனையும் ரத்துசெய்!'