கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தேவியானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி மகள் சரஸ்வதி. டிப்ளமோ நர்சிங் படித்து வந்தார். இவரும், அதே ஊரைச் சேர்ந்த ரங்கசாமி என்பவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே சென்ற ஏப்ரல் 2ஆம் தேதி சரஸ்வதி அவரது வீட்டின் பின்புறம் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். உடற்கூராய்வு அறிக்கையில் சரஸ்வதி கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து திருநாவலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
விசாரணையில் சரஸ்வதியின் காதலன் ரங்கசாமி தலைமறைவாக இருப்பதை அறிந்த காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்தனர். நீண்ட தேடலுக்குப் பின்னர் வழக்கில் தொடர்புடைய ரங்கசாமி, அவரது நண்பர் ரவீந்திரன், பதினேழு வயது சிறுவன் ஆகியோர் ஆந்திர மாநில எல்லையில் பதுங்கியிருப்பதை காவல் துறையினர் கண்டறிந்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சரஸ்வதிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்ததால் தன்னை மறாந்து விடும்படி ரங்கசாமியிடத்தில் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரங்கசாமி, சரஸ்வதியின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்து கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார். இதற்கு ரங்கசாமியின் நண்பர், சிறுவன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இதனையடுத்து மூவரையும் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : குடும்பத்தினருடன் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் பயணம்!