கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஒரு துணிப்பையை எடுத்து வந்து பேருந்து நிலையத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
வெகுநேரம் ஆகியும், அந்தப்பை அதே இடத்தில் இருந்ததால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் உளுந்தூர்பேட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.
தகவலையடுத்து, அங்கு விரைந்து வந்த ஆய்வாளர் அப்பண்டராஜ், அந்தத் துணிப்பையைப் பிரித்து பார்த்தபோது, அதில் பாம்பு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக உளுந்தூர்பேட்டை வனச்சரக அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து, வனச்சரக அலுவலர் காதர்பாட்சா தலைமையிலான வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று பையிலிருந்த மண்ணுளிப் பாம்பை கைப்பற்றி எடைக்கல் காப்புக் காட்டில் விட்டனர்.
மண்ணுளிப் பாம்பு மருத்துவத்திற்கு பயன்படுவதாக தவறான தகவல்கள் பரப்பப்படுவதால், அதை விற்றால் பல லட்சம் ரூபாய் பணம் கிடைக்கும் என்று கடத்தப்படுகிறது; இவ்வாறு கடத்தப்படுவதை தடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:அரியவகை மண்ணுளி பாம்பு: மீட்டு காட்டுக்குள் விட்ட வனத்துறை!