கள்ளக்குறிச்சி: அரசு மருத்துவமனை எதிரே உள்ள டி.எம். பள்ளி வளாகத்தில் குடியிருந்துவரும் ஆசிரியர் விஜயகுமார் என்பவர், தனது குடும்பத்தினருடன் பின்புறம் உள்ள ஓட்டு வீட்டைப் பூட்டிவிட்டு, முன் வீட்டில் படுத்து உறங்கி உள்ளார்.
இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், நள்ளிரவில் விஜயகுமாரின் பின்புற வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 20 பவுன் நகை, 25 ஆயிரம் ரொக்கப்பணம், விலை உயர்ந்த பட்டுப்புடவைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மேலும் கொள்ளையர்கள் சமையலறைக்குச் சென்று குவார்ட்டர் பாட்டிலைத் திறந்து குடித்துவிட்டு சாவகாசமாகத் திருடிச் சென்றுள்ளனர். அதிகாலையில் ஆசிரியர் விஜயகுமார் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது.
இது தொடர்பாக காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து திருடர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.