கள்ளக்குறிச்சி: ஓய்வுபெற்ற சிபிஐ அலுவலரும் ராஜிவ் கொலை வழக்கை விசாரித்து வந்தவருமான ரகோத்தமன் கரோனா தொற்றின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று இரவு 9 மணியளவில் உயிரிழந்தார். 74 வயதான அவர் பணியின் போது முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், வழக்கு விசாரணை மேற்கொண்டதில் பெரும்பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பணி ஓய்விற்குப் பின் தன் குடும்பத்தினரோடு சென்னையில் வசித்து வந்த அவர் ராஜிவ் கொலையில் பேரறிவாளனுக்கு உள்ள தொடர்பு பற்றிய சர்ச்சைகள் குறித்தும், ராஜிவ் கொலை வழக்கு குறித்தும் பல்வேறு வார இதழ்களில் தொடர் எழுதியுள்ளார்.
மேலும் தமிழ்நாட்டில் நடைபெற்ற முக்கியக் குற்ற நிகழ்வுகளின் பின்னணி, அதில் காவல் துறை பங்களிப்பு குறித்த தொலைக்காட்சி விவாதங்களில் ஆர்வமுடன் பங்கேற்று வந்தவர்.
அவரது உறவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவரது உடல் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையை அடுத்துள்ள பாண்டூர் கொண்டு செல்லப்பட்டு உறவினர்களும், ஊர் பொதுமக்களும் அஞ்சலி செலுத்திய பின், அங்குள்ள மயானத்தில் எரியூட்டப்பட்டது.