கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் கடந்த மூன்று நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போது பொழியும் கன மழையால் அருவிகள், ஆறுகள், ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு வருகிறது.
இதனால் பொட்டியம் - பரங்கிநத்தம் செல்லும் சாலையின் குறுக்கே கல் படை ஆற்றுக்கு செல்லும் ஓடையில் இருக்கும் தரைப்பாலத்தின் மேலே வெள்ளம் அதிவேகமாக கரை புரண்டு ஓடுகிறது.
அவ்வழியே இருசக்கர வாகனத்திலும், பாதசாரிகளாகவும் நடந்து செல்பவர்களும் பொட்டியம், மாயம்பாடி, பரங்கிநத்தம், கோட்டக்கரை, மல்லியம்பாடி உள்ளிட்ட மலைக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஓடையில் செல்லும் மழை வெள்ளத்தின் அளவு குறையும் வரை காத்திருந்து தரைப்பாலத்தை கடந்து செல்கின்றனர்.
இந்நிலையில் தங்களின் அன்றாட பணிகளுக்கு செல்ல முடியாமல் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும், மழைக்காலங்களில் இது போன்ற இன்னல்களை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு சிறிய மேம்பாலம் அமைத்து தர வேண்டும் எனவும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்கள் வாயிலாக அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: திருவண்ணாமலையில் இன்று வெற்றி வேல் யாத்திரை?