கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே மூலசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர், தமிழரசன். இவர் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மலேசியா சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள ஒரு தனியார் இனிப்பகத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி, அவர் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய உதவ வேண்டும் என தமிழரசனின் குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்று தமிழரசனின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் நடவடிக்கை எடுத்தார். அதன்படி இன்று (மே.27) மதியம் தமிழரசனின் உடல், அவரது சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அமைச்சர் மஸ்தான் அக்கிராமத்திற்கு வருகை தந்தார்.
பின்னர் தமிழரசனின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்பொது உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஜே. மணிகண்ணன், ஒன்றிய செயலாளர் யூ.எஸ். வைத்தியநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் மஸ்தான் செய்தியாளர்களிடம் பேசுகையில், “வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு திமுக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும். திமுக சார்பில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு சிறு நிவாரணத் தொகை அளிக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு உரிய இழப்பீட்டு தொகையும், பிள்ளைகளின் கல்விக்கான உதவிகளையும் வழங்கும்” என்றார்.
இதையும் படிங்க : சூரப்பா மீதான அறிக்கை அளிக்க கால அவகாசம் கேட்பு: ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன்