நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில் வடிவிலான கோயில்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்மாணித்து வருகிறது. இதேபோன்று, உளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோயிலைக் கட்ட அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான குமரகுரு 4 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்திருந்தார்.
அதன்படி, உளுந்தூர்பேட்டையில் 4 ஏக்கர் 50 சென்ட் பரப்பளவிலான நிலத்தின் ஆவணங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை நில அளவையாளர் ஹரிநாத்திடம் உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் குமரகுரு ஒப்படைத்தார்.
இதையடுத்து நேற்று (பிப்.07) இடம் அளவீடு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த இடத்தில் பிப்ரவரி 18 அல்லது 22ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்டுவதற்கான பணியின் பூமி பூஜையை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க இருக்கிறார்.
இதையும் படிங்க:ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் 24 சவரன் நகை கொள்ளை!