பருவமழையின்மை, உற்பத்திக்கான விலையின்மை, இடுபொருள் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால், நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தைப் பலர் கைவிட்டு வருகின்றனர். இருப்பினும், ஆங்காங்கே ஒரு சிலர் விவசாயத்தில் புகுத்தி வரும் புதிய தொழில்நுட்பங்களும், பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சியுமே இன்றைய தலைமுறையினர் மத்தியில் விவசாயம் மீதான பார்வை விழசெய்யத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக, இயற்கை விவசாயம் மூலம் அதிக லாபம் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் செலவுகளும் குறைகின்றது என்பதால் பலர் மீண்டும் விவசாயத்தில் ஈடுபடத்தொடங்கியுள்ளனர். அதில் ஒன்று தான் தோட்டக்கலைத்துறை அறிமுகப்படுத்திய திசு வாழை வளர்ப்பு. இதன் மூலம் அதிக லாபம் ஈட்டி வருகிறார் கள்ளக்குறிச்சி மாவட்டம், மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயி பாஞ்சாலை.
தோட்டக்கலைத்துறையின் அறிவுறுத்தல் மூலம் பாஞ்சாலை, ஐந்து ஏக்கர் பரப்பளவுள்ள தனது நிலத்தில் திசு வாழையைப் பயிரிட்டுள்ளார். மற்ற வாழை கன்றுகளிலிருந்து வேறுபட்டு நிற்கும் திசு வாழை கன்றுகளை பயிரிடுவதன் மூலம் அடுத்த 11 மாதங்களில் லாபம் பெறலாம். இதற்கிடையில் வாழையின் ஊடு பயிராக கத்தரி, தக்காளி, தர்பூசணி, மிளகாய், அவரை போன்றவற்றையும் பயிரிடலாம். இதன் மூலமும் லாபம் ஈட்டலாம். இப்படி பாஞ்சாலை வாழையையும் நட்டு வாழை அறுவடை செய்யப்படும் வரையில் மற்ற பயிர்களையும் ஊடுபயிராக நட்டு லாபம் ஈட்டி வருகிறார்.
இது குறித்து பேசிய பாஞ்சாலை, "கரும்பு உள்ளிட்ட பயிர்களை கடந்த பல ஆண்டுகளாக பயிர் செய்து அதில் பல்வேறு இன்னல்களை அனுபவித்ததால், தற்பொழுது வாழை பயிர் செய்வதற்கு மாறியுள்ளோம். மேலும் இவ்வாறு ஊடுபயிர் செய்வதன் மூலம் செலவு செய்வதை விட அதிக லாபம் பெற்று வருகிறோம்" என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். இப்படி வாழை அறுவடை செய்யும் முன்னே மற்ற பயிர்களையும் பயிரிட்டு அறுவடை செய்து வரும் இவரின் செயல், "ஒரு கல்லில் இரண்டு மாங்காய்" என்ற பழமொழியை நமக்கு நினைவுபடுத்துகிறது.
இதையும் படிங்க;
'அன்புதான் அனைத்துக்குமான பதில்... அன்பே வழி...' - சாதனைப் பெண் சஞ்சனா கோயல்