கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகேவுள்ள திம்மமலை கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக பொதுமக்கள் குடித்துவந்த தண்ணீர் விஷத் தன்மையடைந்து, குடிநீரை குடிக்கும் பொதுமக்களுக்கு காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
குடிநீரில் கழிவுநீர் கலப்பு:
ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து ஏராளமானோருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் இது குறித்து தியாகதுருகம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த அலுவலர்கள், அங்குள்ள குடிநீரை பரிசோதனைக்கு அனுப்பினர். பரிசோதனை முடிவில் தண்ணீரில் பாக்டீரியா அதிக அளவில் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனாலேயே, பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
தற்போது கனமழை பெய்ததால் திம்மலை கிராமத்தில் வடிகால் வசதி சரியில்லாமல் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நின்றுள்ளது. இந்த ஊருக்கு குடிநீர் வழங்கும் போர்வெல் குழாயானது குப்பை மேடுகள் நிறைந்த இடத்தில் இருந்துள்ளது. இந்த குப்பை மேடுகளில் மழை தண்ணீர் தேங்கி, போர்வெல் குழாயில் கலந்து அந்த தண்ணீர் விஷத் தன்மை உள்ளதாக மாறியுள்ளது. இதன் காரணமாகவே, ஊர் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
குடிநீரில் கலந்த கழிவுநீரை குடித்த நபர் உயிரிழப்பு:
மேலும், அப்பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் இந்த தண்ணீரை குடித்து பாதிக்கப்பட்டதால் அவரது உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று (டிச.22) உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் திம்மலை கிராமம் மக்களிடையே பரவியதைத் தொடர்ந்து, தற்போது கிராம மக்கள் அரசு அலுவலர்களுக்கு எதிராக ஆவேசமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, ஊரக வளர்ச்சித் துறையினர், சுகாதாரத் துறையினர் திம்மலை கிராமத்திற்கு வந்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா திம்மலை கிராமத்திற்கு வருகை தந்து, ஊராட்சிமன்ற அலுவலகத்தில் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க: குடிநீரில் கலக்கும் கரித்துகள்: எண்ணெய் ஆலையை முற்றுகையிட்ட மக்கள்