கள்ளக்குறிச்சி : கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தின் போது பள்ளி வளாகத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர்.
இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், காவல்துறை வாகனத்திற்கு முதலாவதாக தீ வைத்ததாக சின்னசேலம் அருகே பூசப்பாடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்தனர்.
பின்னர் கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) முகமது அலி முன்பு மணிகண்டன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கனியாமூர் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய அப்பகுதியில் உள்ள செல்போன் நெட்வொர்க் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்