கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள வெங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன், வங்கி மூலம் கடன் உதவி பெற்று பொறியியல் பட்ட படிப்பு படித்து வேலைக்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் கல்விக் கடனைத் திரும்பச் செலுத்தக்கோரி வங்கி நிர்வாகத்திலிருந்து தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் பெங்களூருவில் உள்ள அவரது அத்தை வீட்டில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து அப்பணத்தை வங்கிக்குச் செலுத்த முடிவுசெய்திருந்தார். அதுமட்டுமின்றி பகுதி நேர வேலையாக சிசிடிவி கேமரா பொருத்தும் பணியும் செய்துவந்துள்ளார்.
வங்கியிலிருந்து தொடர்ந்து, பணம் செலுத்தி ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி கேட்டுள்ளனர். இதனால் மனம் உடைந்த பாண்டுரங்கன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறார். தனது ஃபேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகப் பதிவு செய்துவிட்டு வீட்டிற்கு அருகே உள்ள குடியிருப்பு மாடியில் சென்று தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த உறவினர்கள் பாண்டுரங்கன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். மேலும் உடலை சொந்த ஊரான வெங்கலம் கிராமத்திற்கு கொண்டுவந்து தகனம்செய்தனர்.
பாண்டுரங்கனின் குடும்பத்தில் ஐந்து பேரில் முதல் மகனும் முதல் பட்டதாரியும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அபராத தொகையை செலுத்தாத காவல்துறையினர் - வெளியான பகீர் தகவல்