வாசல்:
புதிய மாவட்டமான கள்ளக்குறிச்சியில் ஒரு மக்களவைத் தொகுதியும், கள்ளக்குறிச்சி தனித் தொகுதி உட்பட நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளும் உள்ளன.
தொகுதிகள் வலம்:
உளுந்தூர் பேட்டை: இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட விமான ஓடுதளமும், கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவும், இத்தொகுதியின் சிறப்புகள். இங்கு திருநாவலூர் - உடையானந்தல் இடையே பாலம் கட்டித் தர வேண்டும் என்பதே தொகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது. மாணவர்கள் கல்லூரி படிப்புக்காகப் பக்கத்து மாவட்டங்களுக்குச் செல்லும் நிலையை மாற்ற, இங்கு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட வேண்டும். தொகுதிக்குள் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்கின்றனர் தொகுதிவாசிகள்.
ரிஷிவந்தியம்: சோழர்கள், விஜயநகர கலைத் திறனை எடுத்துரைக்கும் பல கோயில்களைக் கொண்ட தொகுதி ரிஷிவந்தியம். தொகுதியின் பிரதான தொழில் விவசாயம். ரிஷிவந்தியம் தொகுதியில் தீயணைப்பு நிலையம் இல்லை என்பது, இம்மக்களின் பெரும் குறையாக உள்ளது. அசம்பாவிதம் ஏதும் நடந்தால் அண்டைத் தொகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவேண்டிய அவல நிலையே தொடர்கிறது.
ரிஷிவந்தியத்தின் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம், அரசு அலுவலகங்கள் பகண்டை கூட்டு ரோட்டிலேயே இருப்பதால் சிறு விசயங்களுக்கும், மக்கள் 20 கிமீ தூரம் பயணப்பட வேண்டியிருக்கிறது. பின் தங்கிய நிலையில் இருக்கும் இந்தத் தொகுதியில் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகள் இல்லாததால், வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தொழிற்சாலைகள் ஏற்படுத்த வேண்டும்.
சங்கராபுரம்: இயற்கை எழில் கொஞ்சும் கல்வராயன்மலை இந்தத் தொகுதியில் உள்ளது. மணிமுக்தா அணையும், சர்க்கரை அலைகளும் அமைந்துள்ளன. இந்தத் தொகுதியில் அதிகமாக விளையும் மஞ்சளை விற்பனைக்காக வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் நேரம், பணம் அதிகம் விரையமாகிறது.
இதனை தவிர்க்க இங்கு மஞ்சள் கொள்முதல் நிலையம் ஏற்படுத்த வேண்டும். மலை கிராமங்கள் அதிகமுள்ள இத்தொகுதியில் சாலை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும். படித்த இளைஞர்கள் பாதை மாறாமல் இருக்க, இங்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும். இங்குள்ள கல்வராயன் மலையை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும் என்பது இம்மக்களின் கோரிக்கைகளாகும்.
கள்ளக்குறிச்சி: தொகுதியின் பிரதானத் தொழில் விவசாயம். நெல் பருத்தி, கரும்பு போன்றவை விளைகின்றன. இந்தத் தொகுதியில் அரிசி ஆலைகள் அதிகம். இங்கு பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படாதது, குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதும் பெருங்குறையே. கிடப்பில் போடப்பட்ட ரயில்வே பணியினை மீண்டும் தொடங்க வேண்டும். சுற்றுச் சாலைகள் அமைப்பதைத் துரிதப்படுத்த வேண்டும் என, நீளுகிறது கோரிக்கைப் பட்டியல்கள்.
களநிலவரம் :
புதிய மாவட்டம் என்பதால் மாவட்டத்தின் தேவைகளும் அதிகம். சுற்றுலாத் தலமாக மாற்ற அனைத்து காரணங்கள் இருந்தும், இங்குள்ள கல்வராயன்மலை இன்னும் சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்படவில்லை. மாவட்டத்தின் தலைநகரில் ரயில் போக்குவரத்து இல்லை. மாவட்டத்திற்கு என சட்டக் கல்லூரியும் , பொறியியல் கல்லூரியும் அமைக்கப்பட வேண்டும் என, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வேண்டும் பட்டியல் நீளுகின்றன.
கள்ளக்குறிச்சியில் உள்ள நான்கு தொகுதிகளிலும், இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் அதிமுகவும், திமுகவும் சமநிலையில் உள்ளன. இந்த முறை திமுகவும், அதிமுகவும் தலா ஒரு தொகுதியில் போட்டியிட்டும், ஒவ்வொரு தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ளன. சரி சமமான பலத்தால் போட்டிகள் கடுமையாக இருந்தாலும், இந்தத் தேர்தலிலும் பழைய நிலையே தொடரலாம்.