கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணத்தைத்தொடர்ந்து நடந்த கலவரத்தின்போது, அப்பள்ளி தாளாளர் வீட்டில் இருந்த 300 சவரன் நகைகள் மற்றும் ரூ.50 லட்சம் ரொக்கம் கொள்ளை போனதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் தொடர்புடைய சிறுவன் ஒருவனை பிடித்து, விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியின் விடுதியில் தங்கிப்படித்த பிளஸ்-2 மாணவி ஒருவர், கடந்த ஜூலை 13-ம் தேதி சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து ஜூலை 17-ம் தேதி அந்த மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு சில அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட, அது கலவரமாக வெடித்தது. இந்த கலவர வழக்கில் 306 பேர் மீது சின்னசேலம் போலீஸாரும், 107 பேர் மீது சிறப்பு புலனாய்வுக்குழு போலீஸாரும் வழக்குப்பதிவு செய்து, 413 பேரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இதில் 13 பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் தற்போதைய விசாரணை நிலை குறித்து சிபிசிஐடி போலீஸாரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது, ‘கலவரத்தின்போது, பள்ளி வளாகத்தில் இருக்கும் தாளாளர் ரவிக்குமார் வீட்டுக்குள் புகுந்த முகமூடி அணிந்த கலவரக்கும்பல் ஒன்று, சுமார் 300 சவரன் நகை மற்றும் ரூ.50 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துள்ளது எனத் தெரியவந்தது.
இதில் தொடர்புடைய சிறுவன் ஒருவனைப் பிடித்து விசாரித்தபோது, தற்செயலாக அக்கும்பலோடு இணைந்ததாகவும், தனக்கு கலவரக்கும்பல் ரூ.50 ஆயிரம் கொடுத்ததாகவும், அதில் செல்போன், உடைகள் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது’ என சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:மருத்துவப்படிப்பிற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் - இமெயில் முகவரி வெளியீடு