கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் நிலையத்திற்கு நேற்று ஒப்பந்த கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தினர் திரளாக வந்திருந்தனர். அப்போது அவர்கள் பேசுகையில், ”இந்த மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பண்ணைகளை வாழ்வாதாரமாகக் கொண்டு கறிக்கோழி உற்பத்தி செய்துவருகிறோம். இதில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து ஒரு கோடி கிலோ உற்பத்தி செய்து இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கோழி நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் தயார் செய்து மக்களின் பயன்பாட்டுக்காக வழங்கி வருகின்றோம்.
தற்போது உலகெங்கிலும் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இது கோழிகள் மூலம் பரவுவதாகத் தவறான வதந்திகளை பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சிலர் அவதூறு பரப்பிவருகின்றனர்.
இதனால் எங்களது கோழி வளர்ப்பு தொழில் பாதிக்கப்பட்டு முற்றிலும் பாதிப்புக்குள்ளான நிலையில் இருக்கின்றோம். சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 30 லட்சம் பாதிப்பு ஏற்படுகிறது. இது குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோர் மீது மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்' என்றனர்.
இதில் சங்க தலைவர் கார்த்திகேயன் உள்பட நூற்றுக்கு மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க... இலவசமாக சிக்கன்-65 அளித்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு!