சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் சக்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் ஏற்பட்ட வன்முறையில் மாணவர்கள், ஆசிரியர்களின் சான்றிதழ்கள் எரிந்து சாம்பலானது. இவர்களின் சான்றிதழ்களை விரைந்து பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமாெழி தெரிவித்தார்.
இந்த நிலையில் இதற்காக மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார், கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலர் அங்கு படிக்கும் 2300 மெட்ரிகுலேஷன் மாணவர்கள் , 400 சிபிஎஸ்இ மாணவர்கள் தொடர்ந்து படிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பொது தேர்வு எழுதும் 10,11 , 12ஆம் வகுப்பில் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அருகில் உள்ள மாற்று தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வகுப்பறைகளில், விரைவில் அந்த பள்ளி ஆசிரியர்களை கொண்டே பாடம் நடத்த ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இங்கு படிக்கும் அனைத்து மாணவர்களின் பிறப்புச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை உடனே கிடைப்பதற்கு விரைவில் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட உள்ளது. பள்ளிக்கல்வித்துறை சான்றிதழ்களையும், வருவாய்துறையின் சான்றிதழ்களையும் உடனே பெற்று வழங்க நடவடிக்கை எடுக்கவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
மேலும் பள்ளியில் படித்த மாணவர்கள் தொடர்ந்து அதே பள்ளியில் படிக்க விரும்பம் தெரிவித்துள்ளதால், பள்ளியை மீண்டும் திறந்து செயல்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கவும் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை செய்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பள்ளி மாடியில் இருந்து குதித்த 11ஆம் வகுப்பு மாணவன்; ஆசிரியர்களிடம் விசாரணை