கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்துள்ள மாதவச்சேரி கிராமத்தில் அண்ணா சிலை தேர்தல் விதிமுறைகளை கடைப்பிடிக்கும் வகையில் துணியால் சுற்றி மூடப்பட்டிருந்தது. நேற்று நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் சிலைக்கு தீ வைத்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சிலையை சுத்தப்படுத்தி மீண்டும் மூடி வைத்தனர்.
இதையடுத்து, அண்ணா சிலைக்கு தீ வைத்த நபர்களை கைது செய்யகோரி அண்ணா ஆதரவாளர்கள் மற்றும் திமுக கட்சியினர் எரிக்கப்பட்ட சிலைக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் விரைந்து கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் காவல்துறை கூறியதையடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கலைந்து சென்றனர்.
மேலும் இப்பகுதியில், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.