கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை அருகில் உள்ள பொரிக்கல் கிராம வனப் பகுதியில், சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடப்பதாக கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, ஆடு மேய்க்கச் சென்றவர்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொரிக்கல் கிராமம் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தது ஆகும். ஆனால், திருவண்ணாமலை மாவட்டம், வெரையூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து 'இது எங்கள் எல்லை இல்லை' என்று சென்றுள்ளனர். இதையடுத்து வந்த மணலூர்பேட்டை காவல் துறையினரும் 'இது எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த இடமில்லை' என்று கூறி அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதனால் தொடர்ந்து 4 நாட்களாக சடலம் அப்புறப்படுத்தாமல் இருப்பதால் பொரிக்கல் கிராம வனப் பகுதியில் துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது . மேலும் அந்த சடலத்தின் பெயர், ஊர் என எதுவும் தெரியாத நிலையில் அழுகிக் கொண்டிருப்பதாகவும், எல்லை பிரச்னையால் இரண்டு காவல் நிலைய காவல் துறையினரும், உடலை உடற்கூறு ஆய்வுக்கு கூட எடுத்துச் செல்ல முன்வராதது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம், சாத்தான்குளம் சம்பவத்தால் ஏற்கெனவே காவல் துறையினர் மீது அதிருப்தியில் இருக்கும் பொது மக்கள், இதுபோன்ற சம்பவத்தால் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, உடனடியாக திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் உயர் அலுவலர்கள், இறந்து துர்நாற்றம் வீசும் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி, விசாரணை செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.