கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி +2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மாடியிலிருந்து விழுந்து இறந்துவிட்டதாக வந்த தகவலை அடுத்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை 9:30 மணி முதல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் இளைஞர்கள் என பல்வேறு அமைப்பினர் திரளாக ஒன்றிணைந்து கனியாமூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 11 மணிக்கு மேலாக போராட்டமானது வன்முறை கலந்த ஆர்ப்பாட்டமாக மாறியது.
இதனைக் கட்டுப்படுத்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையுடன் இணைந்து சேலம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அதிரடிப்படையினர் உள்பட 500-க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதை அடுத்து மாலை 3 மணிக்கு கனியாமூர் தனியார் பள்ளியானது காவல் துறை கட்டுப்பாட்டில் வந்தது.
மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் 144 தடை உத்தரவையும் பிறப்பித்தார். இந்நிலையில், பள்ளி மாணவி விழுந்து இறந்த சம்பவ இடத்தையும் போராட்டக்காரர்களால் வன்முறை களமாக்கப்பட்ட பள்ளி வளாகத்தையும் உள்துறைச்செயலர் பணீந்தர ரெட்டி மற்றும் காவல் துறை தலைவர் சைலேந்திரபாபு மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் வந்து பார்வையிட்டனர்.
தொடர்ந்து அவர்கள் இணைந்து அளித்த பேட்டியில், 'மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர், செயலாளர் ஆகிய மூவரையும் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 70 நபர்களையும் கைது செய்துள்ளோம்' எனத் தெரிவித்தனர்.
தொடர்ந்து அவர் பேசுகையில், 'தமிழ்நாடு அரசு மாணவர்களின் பாதுகாப்பில் அக்கறை கொண்டு இந்த நிகழ்வில் தீவிர விசாரணை செய்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.
இந்த வழக்கானது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது’ என்றனர். மேலும், தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவக்கல்லூரி அரசு மருத்துவமனைக்குச்சென்று வன்முறை சம்பவத்தில் காயமடைந்த காவலர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் - பள்ளிச்செயலர் வெளியிட்ட வீடியோ!