ஈரோடு: பவானிசாகர் நீர்த்தேக்கப் பகுதியில் பரிசல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கி பலியான வாலிபரின் உடல் இன்று காலை மீட்கப்பட்டது. கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கரியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நித்திஷ் குமார் (வயது 18). தனியார் மில்லில் பணிபுரிந்து வந்த இவர் தனது நண்பர்கள் ஆன கிருஷ்ணமூர்த்தி, தீனா, பிரசாந்த், நிஷாந்த் ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து கடந்த ஏழாம் தேதி ஞாயிற்றுக்கிழமை பவானிசாகரில் இருந்து தெங்குமரஹாடா செல்லும் வழியில் உள்ள சுஜில்குட்டை பகுதிக்கு சென்று அங்கு நாகராஜ் என்பவரது பரிசலில் ஏறி பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் பரிசலில் பயணித்தனர்.
அப்போது கரிமொக்கை என்ற இடத்தில் சென்ற போது வேகமாக காற்று வீசியதால் அணை நீர்த்தேக்க பகுதியில் ஏற்பட்ட அலை காரணமாக திடீரென பரிசல் நீரில் கவிழ்ந்து மூழ்கி விபத்துக்குள்ளானது. இதில் நித்தீஷ் குமார் அணை நீரில் மூழ்கி மாயமானார். உடன் வந்த நண்பர்கள் நான்கு பேருக்கும் நீச்சல் தெரிந்ததால் அப்பகுதியில் அருகே பயணித்துக் கொண்டிருந்த அய்யாசாமி என்பவரின் பரிசலில் ஏறி உயிர் தப்பினர்.இது குறித்து பவானிசாகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து நீரில் மூழ்கி பலியான பலி நித்தீஷ்குமாரை தேடும் பணியில் கடந்த மூன்று நாட்களாக மீனவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விசைப்படகு உதவியுடன் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாக தேடும் பணி நடந்தது. அப்போது அணை நீர் தேக்க பகுதியில் வாலிபர் உடல் மிதப்பதை கண்ட மீனவர்கள் அப்பகுதிக்கு சென்று உடலை மீட்டனர். இதைத் தொடர்ந்து பவானிசாகர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் பரிசலில் பயணிக்க அனுமதி இல்லை என நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க:'குற்ற வழக்குகளுக்கு பொதுமக்கள் சாட்சிகளாக முன்வருவதில்லை' - வருந்திய உயர் நீதிமன்ற நீதிபதி!