ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் அதிகமாக கருவேல மர முட்புதர் காடுகள் உள்ளன. இங்கு சூரம்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளியான நாகராஜ் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் அரிவாளால் வெட்டியும், கல்லால் அடித்தும் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அப்பகுதிக்கு சென்ற சிலர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து தகவலறிந்து வந்த காவல் துறையினர், தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் வீரா உடன் வந்து தடயங்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.
நாகராஜின் உடல் அருகே மது பாட்டில்கள் அதிகமாக இருந்ததால், மது அருந்தும்போது நண்பர்களுடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கொல்லப்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குற்றவாளிகளை விரைவில் பிடித்துவிடுவோம் எனவும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, இங்கு அதிகமான முட்புதர் காடுகள் இருப்பதால் மது அருந்த பலரும் வருகின்றனர். இதனால் இப்பகுதி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருவதாக தெரிவித்தனர். உடனடியாக காவல் துறையினர் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுக்கோள் வைத்துள்ளனர்.
இதையும் படிங்க :ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்ற மூதாட்டி