ஈரோடு: வெள்ளோட்டைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவர், தனது தந்தை உயிரிழந்த நிலையில் தாயுடன் வசித்து வருகிறார். பி.இ வரை படித்துள்ள பார்த்திபன், தற்போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பாரூ என்ற பெயரில் கணக்கு வைத்துள்ள பார்த்திபன் இன்ஸ்டாகிராமில் உள்ள நண்பர்களின் கோரிக்கைகளை ஏற்று லைக்குக்காக ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
குறிப்பாக, மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்குச் சென்று குடித்த குளிர்பானத்திற்கு பில் போடுவது, வாசனைப் பொருட்களை விலை கொடுத்து வாங்காமல் அதனை சட்டையில் அடித்து பரிசோதனை செய்வது, நடிகர் விஜய் சேதுபதியைப் போல டீயில் உப்பு போட்டு குடிப்பது, இரவு 12 மணிக்கு கிணற்றில் குதிப்பது, ராயல் சேலஞ்சர்ஸ் கிரிக்கெட் அணி பேட்டிங் செய்யும்போது மூன்றாவது ஓவரில் வரும் விளம்பர பொருளை வாங்குவது,
ஈரோட்டில் இருந்து நாமக்கல் வரை பேருந்தில் பயணிப்பது, குளிர்பானத்தை சூடு செய்து குடிப்பது, உணவகம் ஒன்றுக்குச் சென்று இப்பகுதியில் நல்ல உணவகம் எது என்று கேட்பது, கோயிலுக்குச் சென்று கிரிக்கெட் வீரர் விராட் கோலி பெயரில் அர்ச்சனை செய்வது, மீனை பச்சையாக உண்பது, தலையில் முட்டையை உடைப்பது, இரவு நேரத்தில் சாலையில் படுத்து தூங்குவது, கைக்கடிகாரத்தை உடைப்பது,
மீசையில் சாம்பார் பொடியை தூவுவது, பெட்ரோல் நிலையம் சென்று பத்து ரூபாய்க்கு பெட்ரோல் போடுவது என பார்த்திபன் இன்ஸ்டாகிராம் நண்பர்களின் கோரிக்கையை ஏற்று வீடியோவாக அதனை பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து வந்தார். இந்த நிலையில் போக்குவரத்து நிறைந்த பகுதியில் உள்ள சிக்னலில் நின்று குளியல் போடுவது என்று நண்பர்களிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது.
இதனை ஏற்ற பார்த்திபன், தனது இருசக்கர வாகனத்தில் ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா போக்குவரத்து சிக்னலில் நிறுத்தி உள்ளார். பின் தான் கொண்டு வந்த தண்ணீரை எடுத்து வாகனத்தை ஓட்டி வந்த பார்த்திபன் தனது தலையில் ஊற்றத் தொடங்கி உள்ளார். அதேநேரம், வாகனத்தின் பின் இருக்கையில் இருந்தவர் கீழே இறங்கி இந்த காட்சியினை தனது கைபேசியில் படம் பிடிக்கத் தொடங்கி உள்ளார்.
இதனைக் கண்ட போக்குவரத்து சிக்னலில் இருந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக, காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கினர். அப்போது, அவர் ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டைச் சேர்ந்த பாரூ என்ற பார்த்திபன் என்ற இளைஞர் சமூக வலைதள டாஸ்க்கிற்காக இவ்வாறு செய்தது தெரிய வந்தது. இதே இளைஞர் டாஸ்க் என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் பலவிதமான வீடியோக்களை பதிவிட்டுள்ளதும் தெரிய வந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டே வாகனத்தை இயக்கிய இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது போக்குவரத்து சிக்னலில் நின்று வாகனத்தில் இருந்து கொண்டே தலையில் தண்ணீர் ஊற்றிய இளைஞர் மீது தலைகக்வசம் மற்றும் வாகனத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் 3,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இளைஞரின் எதிர்காலம் கருதி பொது இடங்களில் இது போன்று இடையூறுகள் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக் கூடாது என காவல் துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: குப்பை கிடங்கு எதிர்ப்பு நடைபயணம்: போலீசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு... நடந்தது என்ன?