ஈரோடு சூளை நெசவாளர் காலனி லட்சுமி நகரில் பிச்சைக்காரன் பள்ளம் ஓடை செல்கிறது. இந்த ஓடையின் பாலத்தில் நேற்று நள்ளிரவில் ஒரு இளைஞரின் தலை மட்டும் கிடந்துள்ளது. அந்த வழியாக சென்ற ஒருவர், இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் ஈரோடு நகர துணை காவல் கண்காணிப்பாளர் ராஜூ தலைமையில் ஆய்வாளர்கள் பாலமுருகன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அங்கு பாலத்தின் ஒரு தூணில் ரத்தக்கறையுடன் இளைஞரின் தலை மட்டும் கிடந்தது. இதைத்தொடர்ந்து உடலை காவல் துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு வீதிகளைக் கடந்து, ஓடை ஓரமாக உடல் கிடந்தது தெரியவந்தது. அங்கிருந்து சற்று தொலைவில் ரத்தக்கறையும் படிந்து கிடந்தது. அதைத்தொடர்ந்து உடலையும், தலையையும் காவல் துறையினர் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக அக்கம் பக்கத்தினரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், படுகொலை செய்யப்பட்ட இளைஞருக்கும், மர்ம நபர்களுக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அதில் மர்ம நபர்கள் அந்த இளைஞரை கட்டையால் தாக்கியதும், அதில் மயங்கி விழுந்த அவரை ஆயுதத்தால் தலையை துண்டாக வெட்டி எடுத்ததும் தெரியவந்தது.
மேலும், இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, படுகொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? அவரை யார் கொலை செய்தனர்? கொலைக்கான காரணம் என்ன? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.