ஈரோடு: ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டதும் மனதுருகி கைதூக்கி மறுவாழ்வு அளிக்கிறார் ஈரோட்டை சேர்ந்த இளம்பெண் மனிஷா. இளம்வயதில் 300-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற எளியோருக்கு நல் வாழ்வு அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்தவர் மனிஷா ( 24). இவரது தந்தை கிருஷ்ணசாமி கூலித் தொழிலாளி; தாய் கீதா, சகோதரி பூங்கொடி சென்னையில் வசித்து வருகிறார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் மனிஷா விரிவுரையாளராக உள்ளார்.
மனிஷா நிர்வகித்து வரும் ஜீவிதம் பவுண்டேஷன் என்ற அமைப்பை பற்றி கேட்டறிய அவரை சந்தித்தோம். அப்போது அவர் நம்மிடம் பேசுகையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் பள்ளிப் படிப்பை பூர்த்தி செய்தேன். ராணுவப் பணியில் சேவையாற்ற வேண்டும் என்பதே என் சிறுவயது கனவாக இருந்தது. குடும்ப சூழல் காரணமாக அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினேன்.
மருத்துவராக ஆசைப்பட்டு பொருளாதார சிக்கல் காரணமாக பிஎஸ்சி செவிலியர் படிப்பில் சேர்ந்தேன். என் கல்லூரிப் படிப்பில் ஆண்டு தவறாமல் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றேன். சிறந்த மாணவிக்கான விருதும் கிடைத்தது. நானும் எனது நண்பர்களும் இணைந்து கரோனா காலத்தில் இருந்து ஜீவிதம் பவுண்டேஷன் என்ற தன்னார்வ அமைப்பை நடத்தி வருகிறோம். இதில் சாலையோரங்களில் மனநலம் பாதித்து சுற்றித்திரியும் நபர்களை கண்டறிந்து, அவர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் பணியை மேற்கொள்கிறோம்.
மறுவாழ்வு அளிப்பது என்பது மீட்கப்பட்டவர்களை காப்பகங்களில் இணைத்து பாதுகாப்பது, குடும்பங்களில் இணைப்பது,வேலை வாய்ப்பு அமைத்து கொடுப்பது போன்ற பல்வேறு பணிகள் நிறைந்தது. இதுவரை ஜீவிதம் அமைப்பு மூலம் சாலையோரங்களில் சுற்றித் திரிந்தவர்களை மீட்டு, அரசு பள்ளிகளில் தங்க வைத்து உணவு உடை உள்ளிட்ட தேவையை பூர்த்தி செய்து, 340 நபர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளோம். தீய பழக்க வழக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளித்து வருகிறோம்.
இன்று பலர் நல்ல நிலைமையில் உள்ளனர். நாட்டுக்காக நாம் என்ன செய்தோம் என்ற சிந்தனையின் மூலம் சேவையை துவங்கினேன். என் கல்லூரி பருவத்திலேயே ஆதரவற்ற மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வேன்; இருக்கும் சேமிப்பை இதற்கு செலவழித்து வந்தேன். கல்லூரிப் படிப்பை முடிந்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியில் அமர்ந்த பின்னர், அனுதாபம் பச்சாதாபத்திற்கான (Sympathy empathy) வித்தியாசம் புரிந்து உதவ தொடங்கினேன்.
சாப்பாடு, பெட்ஷீட் உள்ளிட்ட சிறு உதவிகளை செய்து வந்தேன். அதன் மூலம் எளியவர்களின் அன்பை பெற முடிந்தது. மேலும், எனது சேவையை தொடர புது முயற்சியைத் தொடங்கினேன். அதன் விளைவாக 2019-இல் ஜீவிதம் பவுண்டேஷன் என்ற தன்னார்வ அமைப்பு உருவானது என்கிறார்.
கருவுற்றால் ஒரு குழந்தைக்கு மட்டும்தான் அன்னையாக முடியும், கருணையுற்றால் ஆயிரம் குழந்தைகளுக்கு கூட அன்னையாக முடியும்! என்ற அன்னை தெரசாவின் கூற்றுக்கு ஏற்ப மனிஷாவும் அவரது நண்பர்களும் சேவை செய்து வருகின்றனர். அவர்களின் பயணம் தொடர வாழ்த்துகள்.
இதையும் படிங்க: கீழடியில் பிரபல நாட்டியக் கலைஞர் நடனம் - காணொலி வைரல்!