ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி மலைப்பகுதியில் விவசாய நிலங்களில் பயிர்களை பாதுகாக்க இரவு நேரக் காவலுக்காக சென்ற இரு விவசாயிகளை தாக்கிக் கொன்ற, 'கருப்பன் யானை'யைப் பிடிக்க விவசாயிகளை கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கடந்த 12ஆம் தேதி முதல் முத்து, கபில்தேவ், கலீம் என்ற 3 கும்கி யானைகள், 4 மருத்துவர்கள் மற்றும் 140 வனப்பணியாளர்கள் கொண்ட குழுவினர் யானையைப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
யானை வரும் வழித்தடத்தில் வனப்பணியாளர்கள் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்புப்பணியை மேற்கொண்டனர். அதன்படி, கடந்த 13ஆம் தேதி இரியபுரம் விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்த யானையை வனத்துறையினர் பிடிக்க முயன்றனர். ஆனால் தப்பியோடியது.
இதைத்தொடர்ந்து, கடந்த 14ஆம் தேதி 'ஆபரேசன் கருப்பு' என்ற பெயரில் யானையைப் பிடிக்க 3 குழுக்களாக வனப்பணியாளர்களைப் பிரித்து கண்காணித்து வந்தனர். அப்போது இரியபுரம் விவசாய நிலத்துக்குள் மீண்டும் புகுந்த கருப்பன் யானைக்கு இரு முறை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கி முயன்றனர். ஆனால், மயக்க ஊசி பயன் அளிக்காத நிலையில் யானை வேகமாக எழுந்து காட்டுக்குள் தப்பியோடியது.
கடந்த 8 நாள்களில் 4 முறை மயக்க ஊசி செலுத்தியும் கருப்பன் யானையை பிடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால், மனம் சோர்வடைந்த வனத்துறையினர் கருப்பன் யானையைப் பிடிக்கும் முயற்சியை தற்காலிகமாக இன்று (ஜன.19) நிறுத்தி வைத்துள்ளனர். வரும் 26ஆம் தேதி மீண்டும் கருப்பன் யானையைப் பிடிக்கும் பணி தொடரும் என்றும்; அதுவரை யானையின் நடமாட்டம் தொடர் கண்காணிப்பில் இருக்கும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: குன்னூரில் கோடை சீசனுக்கான பணி துவக்கம்: சுமார் 2.8 லட்சம் நாற்றுகள் நடவு!