ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஒட்டர்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனியம்மாள்(50). இவர் தோட்டத்தில் கால்நடை வளர்த்துவருகிறார். இன்று பால் கறப்பதற்காக மாட்டைப் பிடித்துச் சென்றபோது மாடு மிரண்டு ஓடியது.
இதனால், மாட்டின் கயிறைப் பிடித்து ஓடிய பழனியம்மாள் அங்கிருந்த 40 அடி கிணற்றில் தவறி விழுந்தார். கிணற்றில் 7 அடி அளவு தண்ணீர் இருந்ததால் அவர் காயமின்றி உள்ளே கிடந்தார். பின்னர், கிணற்றில் இருந்து சத்தம் வருவதைக் கண்ட கிராம மக்கள், அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினர் கயிற்றைக் கட்டி பெண்ணை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட பெண் தனியார் அவசர ஊர்தியின் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க: போலீஸூக்கு பயந்து கிணற்றில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு!