ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள புங்கம்பள்ளி கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான நூற்பாலை உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர். நூற்பாலை குடோனின் ஒரு பகுதியில் பருத்தி பேல்கள் நூற்றுக்கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பருத்தி பேலை எடுப்பதற்காக தொழிலாளர் ஒருவர் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பேல்கள் மீது ஏறி ஒவ்வொன்றாக கீழே தள்ளியுள்ளார்.
அப்போது மில்லில் பணிபுரியும் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள தாசம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பழனியம்மாள் என்ற பெண் தொழிலாளர் பருத்தி பேல்கள் மேலிருந்து கீழே தள்ளப்படுவதைக் கவனிக்காமல் அவ்வழியே நடந்து சென்றுள்ளார். இதில், பருத்தி பேல் பழனியம்மாளின் தலை மீது விழுந்தது.
இதில், பலத்த காயமடைந்த பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனைக் கண்ட மற்ற தொழிலாளர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
பருத்தி பேலை எடுத்துக்கும்போது பாதுகாப்பு பணிக்காக ஒருவரை நியமித்து பணியாற்றியிருந்தால் இதுபோன்ற விபத்தினைத் தடுத்திருக்கலாம் என தெரிவித்த அப்பகுதியினர், தனியார் நூற்பாலை நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக பெண் படுகாயமடைந்துள்ளதாக குற்றம்சாட்டினர்.
தனியார் நூற்பாலையில் நிகழ்ந்த இந்த விபத்து அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.