ஈரோடு: கனிராவுத்தர் குளம் அடுத்த ஈ.பி. நகரில் தனியார் வங்கி சார்பில் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த ஏடிஎம் இயந்திரத்தின் ஒயர்களை பெண் ஒருவர் அறுத்து கொண்டிருப்பதாக ஈரோடு வீரப்பன் சத்திரம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இந்த தகவலின் பேரில், காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உள்ளனர்.
அப்போது அந்த ஏடிஎம் மையத்தில் உள்ள ஒயரை பெண் ஒருவர் அறுத்துக் கொண்டிருப்பதை கண்ட காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். உடனே அந்த பெண்ணை ஏடிஎம் மையத்தில் இருந்து வெளியே இழுத்து விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணையில், அந்தப் பெண் நசிமா பானு என்பதும், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் தனது மகன் உடன் வசித்து வருவதும் தெரிய வந்து உள்ளது.
மேலும், தறிப்பட்டறை தொழிலாளியான நசிமா பானு, பல்வேறு இடங்களில் கடன் பெற்று, அதை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருந்து வந்து உள்ளதாகவும், இந்த நிலையில்தான் ஈரோட்டில் உள்ள தனியார் ஏடிஎம்-ஐ உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயன்று உள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
இதையும் படிங்க: சுதந்திர தின விழாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி.. பாக். தொடர்பு பயங்கரவாதிகள் 5 பேர் கைது!
இதனை அடுத்து நசிமா பானுவை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய காவல் துறையினர், அவரை கோவை மத்திய சிறையில் அடைத்து உள்ளனர். மேலும் அவரிடம் இருந்து ஏடிஎம்மை கொள்ளை அடிக்க பயன்படுத்திய ஒயர் கட்டர் மற்றும் சுத்தியல் போன்றவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்து உள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இது போன்று ஏடிஎம் உடைப்பில் ஈடுபடும் குற்றச் சம்பவம் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதேநேரம், இத்தகைய செயல்களில் ஈடுபடுவோரை காவல் துறையினர் கைது செய்து, அவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், சொந்த கடன் பிரச்னை காரணமாக ஏடிஎம் மையத்தில் பெண் ஒருவர் கொள்ளை அடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: காவலரை கண்ணாடியால் குத்திய போதை ஆசாமி -நீதிபதி குடியிருப்புக்குள் தப்பியோடியதால் பரபரப்பு!