ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் சில நாள்களாக பலத்த மழை பெய்துவருகிறது. இதனால் முட்டைக்கோஸ், வாழை சாகுபடி நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதேநேரம், பலத்த மழை காரணமாக குளம் குட்டைகளில் நீர் நிரம்பி வழிவதால், தாளவாடி, தொட்டகாஜனூர், சிக்கள்ளி, பாலப்படுக்கை, இக்களூர், நெய்தாளபுரம் மற்றும் அதனையொட்டிய வனப்பகுதி உள்ளிட்ட இடங்களில் உள்ள ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால், ஓடைகளில் வரும் தண்ணீர் காட்டாற்று வெள்ளமாக உருவெடுத்து தரைப்பாலங்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக தாளவாடி - தலமலை இடையே உள்ள சிக்கள்ளி தரைப்பாலத்தில் அடிக்கடி காட்டாற்று வெள்ளம் ஏற்படுவதால், கிராமங்களிடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படுகிறது. அதிலும், இன்று அதிகாலை தரைப்பாலத்தில் கரைபுண்டு ஓடிய வெள்ளம் வடிந்த பிறகு தான் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
இதனால் ஏற்பட்ட தாமதத்திற்கு பிறகு சுமார் 4 மணி நேரம் கழித்து பள்ளி மாணவர்கள், காய்கறி லாரிகள் ஆகியவை செல்லத் தொடங்குகியுள்ளன. மேலும் சுமார் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் கிராமங்களுக்கு செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் உரிய நேரத்திற்கு செல்லமுடியாத நிலையும், தரைப்பாலத்தில் வெள்ளம் கரைபுண்டு ஓடியதால் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகனங்கள் செல்லமுடியாதபடியும் உள்ளது.
எனவே தற்காலிகமாக வெள்ளத்தால் சேதமடைந்த சாலையை சீரமைத்து தருமாறும், நிரந்தமாக உயர்மட்ட பாலம் ஒன்றை கட்டித்தர வேண்டும் எனவும் மாணவர்கள் உள்பட கிராம மக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: எந்தெந்த மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு அதிகம்? - அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்