ஈரோடு: தமிழ்நாடு அரசு ஆசிரியர் கூட்டணி சார்பில் சுமார் இரண்டு லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை அரசு மருத்துவமனைக்கு வழங்கும் நிகழ்ச்சி கோபிசெட்டிபாளையத்தில் நடந்தது.
இதில் வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி பங்கேற்றார். நிகழ்வின் இறுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால்களுக்குப் பாசனத்திற்காக ஆகஸ்ட் 15ஆம் தேதி நீர் திறந்துவிடப்படும்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தலுக்கு முன் பொதுமக்களிடம் பெற்ற மனுக்கள் மீதும், புதிதாகக் கொடுக்கும் மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளார். மாநிலம் முழுவதும் பெரிய திட்டங்களைச் செயல்படுத்த ஏற்பாடு செய்துவருகிறார்.
ஈரோட்டில் மட்டும் 90 பெரிய திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான கோப்புகள் அலுவலர்களிடம் உள்ளது. அந்தத் திட்டங்களைச் செயல்படுத்தி விரைவில் முடிப்பதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் செய்வார்.
தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி, வரும் 3ஆம் தேதி அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படவுள்ளது. அப்போது கரோனா விதிகளைப் பின்பற்றி அனைத்து கட்சி நிர்வாகிகளும் மரியாதை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்
இதையும் படிங்க: கிணற்றில் தத்தளித்த சிறுமியை மீட்ட சிறுவன்: ஆட்சியர் பாராட்டு