ஈரோடு வருவாய் வட்டத்தில் 125க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுக் கலந்தாய்வு நடத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, ஈரோடு வருவாய் கோட்டாட்சியரிடம் கோரிக்கை விடுத்தும் கலந்தாய்வு நடத்தாததைக் கண்டித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தியபோது செப்டம்பர் முதல் வாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு எட்டப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.
ஆனால், செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி வரையில் எந்தவிதமான பேச்சுவார்த்தை நடத்தாததால், இன்று (செப்.16) மாலை முதல் ஈரோடு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள பொதுக் கலந்தாய்வை உடனடியாக நடத்தும் வரையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் கிராம நிர்வாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நாட்டுக்கோழி வளர்ப்பில் அசத்தும் பொறியியல் பட்டதாரி!