ஈரோடு: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (நவ.12) உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், ஈரோடு அருகே அமைந்துள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் தீபாவளி பண்டிகையில் பட்டாசுகள் வெடிக்காமல் கொண்டாடி வருகின்றனர். வெள்ளோடு பகுதியில் அமைந்துள்ள பறவைகளின் சரணாலயமே இதற்கான முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
வெள்ளோடு பகுதியில் பல்வேறு வெளிநாட்டுப் பறவைகளின் வருகையினால் சுற்றுலாத் தளமாக இயங்கிவருகிறது வெள்ளோடு பறவைகள் சரணாலயம். சுமார் 240 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த பறவைகள் சரணாலயத்தில், பறவைகளின் நலனுக்காக 50 ஏக்கர் அளவில் 30 அடியில் தண்ணீர் தேங்கும் வைகையில் குளம் அமைக்கப்பட்டுள்ளது. கீழ்பவானி வாய்க்காலின் கசிவு நீர் மற்றும் மழைக் காலத்தில் நீர் வழி ஓடையின் மூலமாக வரும் தண்ணீரையே இந்த சரணாலயம் ஆதாரமாகக் கொண்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வறட்சியின் காரணமாகக் குளம் மற்றும் மரங்கள் வறண்டு போனதையடுத்து, ரூபாய் 2கோடியே 35லட்சம் செலவில் பறவைகள் சரணாலயம் புதுப்பிக்கப்பட்டு, சரணாலயத்தைச் சுற்றி கரைகள் பலப்படுத்தப்பட்டு, சிறு பாலங்கள் அமைத்து அவைகளை நடைபாதைகளாக மாற்றப்பட்டு, பல்வேறு பறவைகளின் வண்ண ஓவியங்கள், பட்டாம் பூச்சி பூங்கா, செல்பி பாயின்ட் என பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றது. இந்தப் பணிகள் முடிவுற்று எழில் நிறைந்த ரம்மியமாகக் காட்சியளிக்கின்றது வெள்ளோடு பறவைகள் சரணாலயம்.
இந்த சரணாலயத்தில் உள்ள குளத்தில் உள்ள மீன்களை உண்டு இனப்பெருக்கம் செய்யப் பறவைகள் இங்கு அதிகம் வருவதுண்டு. ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரையில் பறவைகளுக்கான வருகை பருவகாலம் தொடங்கும். இந்த காலத்தில் உள்நாட்டுப் பறவைகளான மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, வெள்ளை அரிவால் மூக்கன், பொறி உள்ளான், நீலவால் இரைக்கோழி, சிறிய நீர் காகம், சாம்பல் நாரை, பஞ்சுருட்டான் போன்ற உள்நாட்டுப் பறவைகளும்
சைபீரியா, நியிசிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷ்யா போன்ற வெளிநாடுகளிலிருந்து சுழைக்கடா, வண்ணநாரை, நெடுங்கல் உள்ளான், செம்பருந்து பூ நாரை, வால் காக்கை, காஸ்பியன் ஆலா, வெண்புருவ சின்னான், கருங்கழுத்து நாரை போன்ற வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து இந்த சரணாலய குளத்தில் இருக்கும் மீன்களை உணவாக உண்டு, இங்கேயே மரங்களில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து அதன் குஞ்சுகள் வளர்ந்தவுடன் மீண்டும் அதன் இடத்திற்குச் செல்கின்றது.
இந்த பறவைகளுக்கான ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி அருகாமை மாவட்டங்களிலிருந்தும் பொதுமக்கள் வருவது உண்டு. இவ்வாறு இனப்பெருக்கம் செய்ய வரும் பறவைகளுக்கு எந்த விதமான இடையூறும் செய்யக் கூடாது என முடிவு செய்து இந்த பறவைகள் சரணாலயத்தைச் சுற்றியுள்ள பி.மேட்டுப்பாளையம், பூங்கம்பாடி, தலையன்காட்டு வலசு, தச்சன்கரைவழி, செம்மாம்பாளையம், எல்லப்பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 17வது ஆண்டாகப் பட்டாசு வெடிக்காமல் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.
இது குறித்து அப்பகுதியில் வசித்துவரும் சக்திவேல் கூறுகையில், "கடந்த 16 வருடமாக வெளிநாட்டிலிருந்து பறவைகள் இங்கு வருகின்றன. இந்த பறவைகள் இங்கு வந்துதான் இனப்பெருக்கம் செய்கிறது. இதனால் இந்த பறவைகளைத் தொந்தரவு செய்யாத வகையில் நாங்கள் தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பதில்லை. தீபாவளி மட்டுமின்றி எந்தவொரு நிகழ்ச்சிகளுக்கும் நாங்கள் பட்டாசு வெடிப்பதில்லை. சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தடுக்க மரங்களை வைக்க வேண்டும். அயல் நாடுகளிலிருந்து கூட்டம் கூட்டமாகப் பறவைகள் வருவதும் அதனைப் பார்க்கப் பொதுமக்கள் வருவதும் எங்களது கிராமத்திற்குப் பெருமை சேர்க்கின்றது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தீபாவளி தினத்தில் திருப்பூர் கடைவீதிகளில் குவிந்த வடமாநிலத் தொழிலாளர்கள்!