ஈரோடு மாவட்டத்தின் கடைவீதிப் பகுதியில் செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி காய்கறிச் சந்தை மிகவும் குறுகலானதாகவும், காற்றோட்டமும் வெளிச்சமும் இல்லாத பகுதியாக இருந்த காரணத்தினால் நோய்ப்பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தினசரி சந்தை தற்காலிகமாக ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்தது.
இதனிடையே பேருந்துகள் இயக்கப்பட்டதன் காரணமாக, பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த தினசரி காய்கறிச் சந்தை தற்காலிகமாக ஈரோடு வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதான வளாகத்திற்கு மாற்றப்பட்டது.
சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 700 காய்கறிகள் மற்றும் பழக்கடைகளுக்கு குலுக்கல் முறையில் இடம் ஒதுக்கப்பட்டு நேற்று(ஜூலை 4) முதல் காய்கறிச் சந்தை செயல்படத் தொடங்கியது.
இந்த நிலையில் நேற்று முன் தினம்(ஜூலை 3) மாலை முதல் இரவு வரை, கனமழை கொட்டித் தீர்த்ததன் காரணமாக புதிதாக கட்டப்பட்ட தினசரிக் காய்கறிச் சந்தையில், தண்ணீர் தேங்கி சந்தை முழுவதும் சேறும் சகதியுமாக இருந்ததால், வியாபாரிகள் தங்களது கடைகளுக்குச் செல்ல முடியாத நிலையும், மொத்த வியாபாரிகளும் எளிதாக வந்து காய்கறிகளை வாங்கிச் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.
அதேபோல் பேருந்து நிலையத்தில் காய்கறிச் சந்தை செயல்பட்டபோது, வியாபாரி ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து காய்கறிச் சந்தை நாள்தோறும் அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை மட்டுமே செயல்பட்டது. மொத்த வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு பொதுமக்களும், சில்லறை வியாபாரிகளும் அனுமதிக்கப்படவில்லை.
புதிதாக இடம் மாற்றப்பட்டுள்ளதால், பழைய நடைமுறையை நீக்கிட வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், காலை தினசரிச் சந்தையின் பிரதான கதவை காவல் துறையினர் ஏழு மணிக்கே மூடியுள்ளனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள், பூட்டிய கதவை முற்றுகையிட்டபடி பழைய காய்கறிச் சந்தையில் நீடித்த நேரக்கட்டுப்பாட்டை புதிய காய்கறிச் சந்தையில் நீக்கி வழக்கம்போல் பொதுமக்களையும், சில்லறை வியாபாரிகளையும் அனுமதித்திட வேண்டும் என்றும்; சந்தையின் கதவை காவல் துறையினர் திறக்க வேண்டும் என்றும் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதுமட்டுமின்றி, காய்கறிகளை தரையில் கொட்டி வியாபாரிகள் தங்களது எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.
வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபடுவது குறித்து தகவலறிந்து விரைந்த, மாநகராட்சித்துறையினர் வரும் திங்கள் கிழமை முதல் தினசரிச் சந்தையில் பொதுமக்களும், சில்லறை வியாபாரிகளும் அனுமதிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
இதையடுத்து வியாபாரிகள் திரும்பிச் சென்றனர்.