உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கவுந்தம்பாடியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று மரக்கன்றுகள் நடப்பட்டன.
வனத்துறை சார்பில் கால்நடைகள் சாப்பிடாத வகையில் ஐந்து அடி உயர மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு பள்ளிகளுக்கும், சமூகச் செயற்பாட்டாளர்களுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் இதுவரை 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
மரம் வளர்த்து பராமரிக்கும் சமூகச் செயற்பாட்டாளர், பள்ளி மாணவர்கள், அதிக மரம் வளர்த்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஜூன் 5ஆம் தேதி விருதுகள் வழங்கப்படும். தற்போது கரோனா பிரச்னை உள்ளதால் விருதுகள் பின்னர் வழங்கப்படும். அதற்கான தேதியை முதலமைச்சர் அறிவிப்பார்.
சேலம்-சென்னை இடையே அமைக்கப்படவுள்ள எட்டு வழிச்சாலை கைவிடப்படவில்லை. அது கண்டிப்பாக நடக்கும். சாலைப் பணிகளின்போது வெட்டப்பட்ட மரங்களின் நிலை குறித்து முதலமைச்சர் பதிலளிப்பார்.
சுற்றுச்சூழலைப் பாதிக்கும் 14 வகையான பொருள்களுக்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தத் தடை நீடிக்கும். சுற்றுச்சூழலை அதிகம் பாதிக்கும் பொருள்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளதால், கூடுதலாகப் பொருள்களைத் தடைசெய்ய வாய்ப்பில்லை.
மனிதக் கழிவுகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட முகக்கவசம் ஆகியவை நகராட்சி, ஊராட்சிகளில் தனியாகப் பெறப்பட்டு மாசு ஏற்படுத்தாத வகையில் எரிக்கப்படுகின்றன" என்றார்.
இதையும் படிங்க: சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கரோனா இல்லை - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்